ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், கேட்பவர் நெஞ்சை உறைய வைப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பெற்றோரின் மனிதாபிமானம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஷெராபுதீன் – ரூமி தம்பதியரின் 22 மாதக் குழந்தை ஆலன், ஒரு மாலை வேளையில் விளையாட்டாக ஒரு பூனையைத் துரத்திக்கொண்டு ஓடியுள்ளான். தாய் தன்னைத் துரத்தி வருவதை ஒரு விளையாட்டாக நினைத்து அந்தப் பிஞ்சு வேகமெடுக்க, எதிர்பாராத விதமாக அந்தப் பாதையில் வந்த காரின் அடியில் சிக்கினான். சிதைந்த உள் உறுப்புகளுடன் துடித்த குழந்தையை, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரே மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றார்.
ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைப் பலனின்றி அந்தப் பிஞ்சு உயிர் காற்றில் கலந்தது. வரும் ரமலான் மாதத்தில் உம்ரா சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பி அங்கேயே நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிட்டிருந்த அந்தக் குடும்பத்தின் கனவுகள் அனைத்தும் ஒரு நொடி விபத்தில் சிதறிப்போயின.
மகனைப் பறிகொடுத்த ஆறாத் துயரிலும், அந்தப் பெற்றோர் எடுத்த முடிவு உலகிற்கே ஒரு மனிதாபிமானப் பாடத்தைப் புகட்டியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய இந்திய ஓட்டுநர் மீது எந்தப் புகாரும் அளிக்கப் போவதில்லை என்றும், அவரைத் தாங்கள் மன்னிப்பதாகவும் ஷார்ஜா அதிகாரிகளிடம் அந்தத் தம்பதி எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர்.
“எங்கள் மகனின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான், ஆனால் தெரியாமல் நடந்த ஒரு தவறுக்காக மற்றொரு குடும்பம் சிதைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை” என கண்ணீருடன் ஷெராபுதீன் கூறிய வார்த்தைகள் ஒட்டுமொத்த அமீரகத்தையே நெகிழ வைத்துள்ளது.
“இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான்” எனத் தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டு, அந்தப் பெற்றோர் காட்டிய இந்த உயர்ந்த குணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
