உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், மருத்துவரான தனது கணவர் உடலுறவு கொள்ள இயலாதவர் என்று கூறி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் சுமார் 15 லட்சம் ரூபாய் வரதட்சணை மற்றும் சீர்வரிசைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

இருப்பினும், திருமணமான ஒன்றரை ஆண்டுகளாகத் தனது கணவர் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தனி அறையிலேயே உறங்குவதாகவும், இதுவரை தங்களுக்குள் தாம்பத்திய உறவு ஏற்படவில்லை என்றும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கணவரின் பையில் இருந்த மருந்துகளைக் கவனித்த பின்னரே, அவருக்குப் உடல் ரீதியான குறைபாடு இருப்பது தனக்குத் தெரியவந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோது, சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் சரியாகிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், நீண்ட நாட்களாகியும் நிலையில் மாற்றம் இல்லாததால், இப்பிரச்சினை குறித்து அந்தப் பெண் தனது பிறந்த வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். இதையறிந்த கணவர் வீட்டார்கள் அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, கடந்த நவம்பர் 15-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

தற்போது தனது சகோதரருடன் காவல் நிலையம் சென்ற அந்தப் பெண், தனக்கு இழைக்கப்பட்ட துரோகம் மற்றும் வரதட்சணை கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.