பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் தொடக்கத்திலேயே தரமற்ற மேலாண்மை காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் உலக அரங்கில் தலைகுனிவைச் சந்தித்துள்ளது. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பிஎஸ்எல் அணி உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

லாகூர் கலாந்தர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது இந்த வினோதமான சம்பவம் நிகழ்ந்தது. போட்டி தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே, வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சியின் சாயம் பட்டு, வெள்ளை நிறப் பந்து சிவப்பு நிறமாக மாறியது.

இந்தத் தரமற்ற ஜெர்சிகளால் ஏற்பட்ட குளறுபடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் (PCB), பிஎஸ்எல் அணிகளையும் கடுமையாக கேலி செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சோயப் அக்தர், “இவ்வளவு பெரிய அவமானத்தை நான் வேறு எந்த லீக் போட்டிகளிலும் பார்த்ததில்லை. ஜெர்சி சாயம் போனதால் பந்து சிவப்பாக மாறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தரமான ஜெர்சிகளைத் தயாரிக்கக்கூட உங்களிடம் பணம் இல்லையென்றால், எதற்காக அணிகளை விலைக்கு வாங்குகிறீர்கள்? உங்கள் அணியின் கேப்டன் லபுசேன் உலக அரங்கில் நம்மை அசிங்கப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்,” எனத் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய வீரருமான மார்னஸ் லபுசேன் இதுகுறித்து கூறுகையில், “இரண்டாவது ஓவர் முடிந்ததும் நான் நடுவரிடம் பந்து சிவப்பாக மாறுவதைச் சுட்டிக்காட்டினேன். உடைகளில் இருந்த சாயம் பந்தில் ஒட்டிக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற ஒரு விஷயத்தை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெர்சி சர்ச்சை மட்டுமின்றி, மைதானத்தில் இருந்த ஒலி அமைப்பும் (Sound Quality) மிகவும் மோசமாக இருந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. “பாகிஸ்தானிடம் தொடரை நடத்தப் பணம் இல்லை, ஆனால் பிடிவாதமாக நடத்துகிறார்கள்” எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவும் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ள கருத்தில், “கடந்த ஆண்டு ஒளிபரப்புத் தரம் சிறப்பாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு மிகவும் மோசமாக உள்ளது. பிசிபி (PCB) சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறது. அந்தப் பணம் எங்கே போகிறது? தரமான ஒளிபரப்பைக்கூட உங்களால் வழங்க முடியவில்லையா?” என வினவியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் அதிகாரிகள் வெறும் பேச்சோடு நிற்காமல், செயலில் காட்ட வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.