பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 கிரிக்கெட் தொடர் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் லாகூர் கலாந்தர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மென் அணிகள் மோதின. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் அரங்கேறிய சில சம்பவங்கள் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகின்றன.

அதன்படி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மோக்சின் நக்வி மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த வயர் ஒன்றில் அவரது கால் எதிர்பாராதவிதமாக சிக்கியது. இதில் நிலைதடுமாறிய அவர், முகங்குப்புற விழவிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக சுதாரித்துக் கொண்டு கீழே விழாமல் தப்பினார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sarwar Links (@sarwar_links)

உலக அரங்கில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகத்தை விமர்சனத்திற்குள்ளாக்கும் வகையில் மற்றொரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியது. போட்டியின் போது ஹைதராபாத் கிங்ஸ்மென் அணி வீரர்களின் சீருடையில் இருந்த சாயம், பந்தில் ஒட்டிக்கொண்டது. இதனால் வெள்ளை நிறப் பந்து, சிறிது நேரத்திலேயே இளஞ்சிவப்பு (Pink) நிறமாக மாறியது.

இதுகுறித்து அந்த அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய வீரருமான மார்னஸ் லபுஷேன் கூறுகையில், இரண்டாவது ஓவர் முடிந்த போதே நான் நடுவரிடம் இது குறித்துப் புகார் அளித்தேன். பந்து சிவப்பாக மாறியிருந்தது. வீரர்களின் சீருடையில் இருந்த சாயம் காரணமாகவே இது நடந்திருக்க வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.

இந்தக் குளறுபடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. 200 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் கிங்ஸ்மென் அணி, லாகூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 130 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் லாகூர் கலாந்தர்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.