தெலுங்கானா மாநிலத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, சிறை வாசலிலேயே கூலிப்படை ஏவிக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது தம்பியைப் போலீசார் கைது செய்தனர். சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது டோர்னாலினா பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லாலு ஸ்ரீனு (38). இவரது மனைவி ஜான்சி. கஞ்சா விற்பனை வழக்கில் கைதான லாலு ஸ்ரீனு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கணவர் சிறையில் இருந்த நேரத்தில், ஜான்சிக்கும் சூரிய நாராயணா என்ற கார் ஓட்டுநருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சிறையில் உள்ள கணவரைப் பார்க்க ஜான்சி தனது தம்பியுடன் சென்றிருந்தார். அப்போது தனது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்குத் தெரிந்ததை உணர்ந்த ஜான்சி அதிர்ச்சியடைந்தார். லாலு ஸ்ரீனுவும், தான் வெளியே வந்தவுடன் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஜான்சி, கணவர் ஜாமீனில் வருவதற்கு முன்பே அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, குண்டூரைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு ரூ. 2 லட்சம் தருவதாக ஒப்பந்தம் பேசி, ரூ. 1 லட்சத்தை முன்பணமாக வழங்கினார் ஜான்சி.
நேற்று முன்தினம் லாலு ஸ்ரீனு ஜாமீனில் வெளியே வந்தபோது, ஜான்சியும் அவரது தம்பியும் காரில் சென்று அவரை அழைத்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து கள்ளக்காதலன் சூரிய நாராயணாவும் கூலிப்படையினரும் மற்றொரு வாகனத்தில் பின்தொடர்ந்தனர். வழியில் சிறுநீர் கழிக்க லாலு ஸ்ரீனு காரை நிறுத்தச் சொன்னபோது, ஜான்சியும் அவரது தம்பியும் திடீரென அவரது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட கூலிப்படையினர் லாலு ஸ்ரீனுவை குண்டுக்கட்டாகத் தூக்கிக் காரில் போட்டனர். அப்போது ஜான்சியும் அவரது தம்பியும் கத்தியால் லாலு ஸ்ரீனுவை சரமாரியாகக் குத்திக் கொலை செய்தனர்.
கொலைக்கு பின், “நீங்கள் இருவரும் போலீசில் சரணடையுங்கள், நான் ஜாமீனில் எடுத்துவிடுகிறேன்” என கள்ளக்காதலன் சூரிய நாராயணா கூறியதை நம்பி, ஜான்சியும் அவரது தம்பியும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து கொலை செய்ததை ஜான்சி ஒப்புக்கொண்டார். தற்போது தலைமறைவாக உள்ள சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினர் உட்பட 5 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
