கேரளாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தபோது, அனுமதியின்றி பதாகைகள் மற்றும் கொடிகளை வைத்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் நகர மாவட்டக் குழுவிற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கேரளாவுக்கு வருகை புரிந்து புதிய ரயில் சேவையைத் தொடங்கி வைத்ததோடு, பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதையொட்டி, திருவனந்தபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமரை வரவேற்று ஏராளமான கொடிகள், பதாகைகள் மற்றும் ஃபிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இவை உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக காவல் நிலையங்களில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், நடைபாதையில் இருந்த ஒருசில பலகைகளைத் தவிர மற்றவை அகற்றப்படவில்லை. இதன்காரணமாகவே, விதிகளை மீறியதற்காக ரூ.19.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான நோட்டீஸ் பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்றார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தைக் கவனித்த கேரள உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பதாகைகளை வைக்கக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள போதிலும், அவை தொடர்ந்து மீறப்படுவது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். “வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது; பொது இடங்களை ஆக்கிரமிக்கும் இந்த கலாச்சாரம் மாற வேண்டும்” என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சி தற்போது பாஜகவின் வசமுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவரே மேயராக இருக்கும் சூழலில், பாஜக நிர்வாகத்திற்கே மாநகராட்சி அபராதம் விதித்திருப்பது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
