மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, மாணவர் ஒருவர் தனது கால் விரல்களைத் தானே துண்டித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் பாஸ்கர் (20) என்ற இளைஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வெழுதியும் தோல்வியடைந்துள்ளார். எப்படியாவது இந்த முறை மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாகப் படித்து வந்துள்ளார்.
சூரஜ் ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், அவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற நிர்பந்தம் காதலி தரப்பிலிருந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும், மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடு (PWD Quota) இருந்தால் எளிதாக மருத்துவம் பயில இடம் கிடைக்கும் என சூரஜ் கருதியுள்ளார்.
இதற்காக ஒரு விபரீத முடிவை எடுத்த சூரஜ், வலிக்காமல் இருப்பதற்காகத் தனக்குத் தானே மயக்க மருந்து செலுத்திக்கொண்டு, தனது ஒரு காலில் இருந்த நான்கு விரல்களைத் துண்டித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், “யாரோ மர்ம நபர்கள் என்னைத் தாக்கி விரல்களைத் துண்டித்துவிட்டார்கள்” என நாடகமாடியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சூரஜின் செல்போனை ஆய்வு செய்தபோது அவரது காதல் விவகாரம் தெரியவந்தது. அவரது காதலியிடம் நடத்திய விசாரணை மற்றும் சூரஜிடம் மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், இடஒதுக்கீட்டிற்காகத் தானே விரல்களைத் துண்டித்துக் கொண்ட உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜ் மீது, போலீசாரைத் தவறாக வழிநடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
