தற்கால இளைஞர்கள் (Gen-Z) நெருக்கடியான சூழல்களைக் கையாளும் விதம் முந்தைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தங்கள் செல்போன் மற்றும் பணத்தைத் திருட முயன்ற திருடன் ஒருவனைப் பிடித்த இளைஞர் குழு, அவரிடம் காட்டிய நிதானமும், அந்தச் சூழலை அவர்கள் கையாண்ட விதமும் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் தங்களின் உடைமைகளைத் திருட முயன்ற நபரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் கோபமும், வன்முறையும் வெடிப்பது இயல்பு. ஆனால், இந்த இளைஞர்களோ எவ்வித ஆக்ரோஷமும் இன்றி, ஒரு Vlog எடுப்பது போன்ற இயல்பான தொனியில் அந்தத் திருடனிடம் விசாரணை நடத்தினர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Shreyansh Shukla (@adiktivmutant)

பிடிபட்ட நபர் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட, அந்த இளைஞர்களோ மிகவும் நிதானமாக அவரிடம் கேள்விகளை எழுப்பினர். சத்தமோ, மிரட்டலோ இன்றி அந்தச் சூழலை அவர்கள் கட்டுக்குள் வைத்திருந்தது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘அடிக்டிவ் மியூட்டண்ட்’ (adiktivmutant) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இரண்டே நாட்களில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், “இந்தத் தலைமுறையினர் எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவே பிடித்துள்ளது” என்றும், “வன்முறை இன்றி எதையும் கையாள முடியும் என்பதை ஜென்-ஸி தலைமுறை உலகிற்கு கற்றுக்கொடுக்கிறது” என்றும் பாராட்டியுள்ளனர். மற்றொரு பயனர் கிண்டலாக, “திருடனைக் கூட இவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையே!” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இளைய தலைமுறையினரின் மனப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அகிம்சை வழியில் சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற நற்பண்புகள் இவர்களிடம் மேலோங்கியிருப்பதாக ஒரு தரப்பினர் கூறினாலும், இதுபோன்ற விபரீதமான சூழல்களில் கூடுதல் எச்சரிக்கை அவசியம் என மற்றொரு தரப்பினர் எச்சரிக்கின்றனர்.

மேலும் நகைச்சுவை, நிதானம் மற்றும் தன்னம்பிக்கை ஆகிய மூன்றையும் கலந்து இந்த இளைஞர்கள் வெளிப்படுத்திய விதம், நிஜ வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதில் புதியதொரு பாதையைக் காட்டுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.