ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் இப்போது மத்திய கிழக்கின் ஒட்டுமொத்த அரசியலையும் புரட்டிப் போட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை அமைதியை நோக்கிச் சென்ற ஈரான் – சவூதி அரேபியா உறவு, இப்போது மீண்டும் மோதல் பாதைக்குத் திரும்பியுள்ளது. சவூதி அரேபியா தனது நாட்டில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு சனிக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் ராணுவ தூதர் உதவி தூதர்கள் மற்றும் தூதரக ஊழியர்கள் மூவர் உட்பட பலரை ‘ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களாக’அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சவூதி மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் சகிப்புத்தன்மையின் எல்லையைத் தாண்டிவிட்டதாக சவூதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“ஈரான் ஒருபுறம் அமைதி பற்றிப் பேசிக்கொண்டே, மறுபுறம் சவூதியின் மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறது” என சவூதி குற்றம் சாட்டியுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மற்றும் பிற அரபு நாடுகள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மட்டுமன்றி, சீனா முன்னின்று நடத்திய ‘பெய்ஜிங் பிரகடனத்தையும்’ மீறுவதாக உள்ளது என சவூதி சாடியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் தனது பதிலடியைத் தீவிரப்படுத்தியது. பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மட்டுமன்றி, சவூதி அரேபியாவின் எல்லைகளுக்குள்ளும் ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளது. தனது நாட்டின் இறையாண்மை மீதான இந்தத் தாக்குதலை சவூதி மிகத் தீவிரமாகக் கருதுகிறது.
“ஈரான் தன்னை இஸ்லாத்தின் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்கிறது. ஆனால் அண்டை நாடான ஒரு முஸ்லிம் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானது” என சவூதி தனது அறிக்கையில் ஈரானின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. சவூதி அரேபியாவின் இந்த அதிரடி முடிவால் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும். செங்கடல் (Red Sea) மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் கடல்வழிப் போக்குவரத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம். மேலும் டெஹ்ரான் (ஈரான்) தரப்பிலிருந்து இதற்குப் பதிலடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்து போயுள்ளன.
