கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், தேர்வு எழுத ஆட்டோவில் சென்ற 12 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் சேவாயூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 12 வயது மகள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பள்ளியில் தேர்வு இருந்துள்ளது. இதனால், மகளைப் பாதுகாப்பாகப் பள்ளியில் விடுவதற்காக, பெற்றோர் தங்களுக்குத் தெரிந்த ஆட்டோ ஓட்டுநரான முகமது நூர் (45) என்பவரை அழைத்துள்ளனர்.
பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்று, சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முகமது நூர் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளிக்குச் செல்லும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு ஆட்டோவைக் கொண்டு சென்ற முகமது நூர், அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.
தங்களது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக முயன்ற ஆட்டோ ஓட்டுநர் முகமது நூரை அதிரடியாகக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையை அனுப்பி வைத்த பெற்றோரை நிலைகுலையச் செய்துள்ள இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
