மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, மின்சார அடுப்பு விற்க முயல்வது போல நடித்து முதியவர் ஒருவரிடம் ரூ. 3.10 லட்சத்தை சைபர் கொள்ளையர்கள் மோசடி செய்துள்ளனர். இதேபோல், ஆன்லைன் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் ரூ. 3.19 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது.

புனே, கொத்ரூட் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தற்போது நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆன்லைனில் மின்சார அடுப்பு வாங்க முடிவு செய்தார். சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, அதில் இருந்த எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது பேசிய மர்ம நபர்கள், அடுப்பிற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனக் கூறி, அவரது வங்கி விவரங்களைப் பெற்றுள்ளனர். அந்த விவரங்களைப் பயன்படுத்தி முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 3.10 லட்சத்தை வேறொரு கணக்கிற்குத் திருடினர். இதுகுறித்து கொத்ரூட் காவல் ஆய்வாளர் சந்தீப் தேஷ்மானே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவத்தில், சந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், வீட்டில் இருந்தபடியே நட்சத்திர விடுதிகளுக்கு (Star Hotels) இணையதளத்தில் மதிப்பீடு (Reviews) வழங்கினால் கைநிறையச் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அந்தப் பெண் செய்த வேலைக்குச் சிறு தொகையை ஊக்கத்தொகையாக வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்திய கொள்ளையர்கள், பின்னர் அதிக லாபம் பெற பணத்தை முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். அதனை நம்பி அந்தப் பெண் ரூ. 3.19 லட்சத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், அதன்பிறகு அசல் தொகையையும் வழங்காமல், லாபத்தையும் தராமல் மர்ம நபர்கள் தலைமறைவாகினர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் நிலேஷ் படாக் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் அல்லது மின்சார அடுப்புகளை மலிவு விலையில் தருவதாக வரும் தேவையற்ற குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் எனப் புனே போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமாக மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.