ஏற்கனவே பணியில் இருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து முழுமையாக விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து, ஓராண்டு மட்டுமே காலநீட்டிப்பு வழங்கியுள்ள விவகாரம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திடையேயும் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களைப் பாதுகாக்கச் சீராய்வு மனுத் தாக்கல் செய்தது, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கோரியது, சிறப்புத் தகுதித் தேர்வுக்கான அரசாணை 231-ஐ வெளியிட்டு 5 சதவீத மதிப்பெண் தளர்வு தந்தது மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கட்டகங்களை (Training Modules) தயார் செய்ய எஸ்சிஇஆர்டி-யிடம் (SCERT) பொறுப்பை ஒப்படைத்தது என அக்மார்க் பல்வேறு அதிரடி நன்மைகளைச் செய்து அரணாக நின்றது திமுக அரசுதான் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தற்போதைய தவெக அரசு வரும் ஜூலை முதல் வாரத்தில் டெட் தேர்வு நடத்தவிருக்கும் சூழ்நிலையிலும், இதுவரை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கட்டகங்களையோ அல்லது இணையவழிப் பயிற்சி (Online Training) குறித்த அறிவிப்பையோ வெளியிடாமல் மெகா அஜாக்கிரதையாக வேடிக்கை பார்த்து வருவதாக அவர் சாடியுள்ளார்.
இந்த விவகாரத்தில், தற்போதைய தவெக அரசு வெறும் ‘ரீல்ஸ்’ அரசாக இருந்து வீரவசனம் பேசிக் காலத்தைக் கடத்தாமல், உடனடியாகப் நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், தங்களது குடும்ப உறுப்பினர்களான ஆசிரியர்களுக்கு திமுக என்றும் துணையாக நிற்கும் என்றும் அன்பில் மகேஷ் சவால் விடுத்துள்ள செய்தி தற்போது கோட்டை வட்டாரத்திலும் சோசியல் மீடியாவிலும் காட்டுத்தீயாய் பரவி மெகா பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
