நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்ட முட்டுக்கட்டை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

முன்னதாக, இப்படத்திற்கு உடனடியாக ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, நேற்று தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கை மீண்டும் அதே தனி நீதிபதியின் விசாரணைக்கே அனுப்பி வைத்தது.

தொடர் சட்டப் போராட்டங்களால் படம் வெளியாவது தாமதமாவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது: “பிரியாணி என்றால் அதைச் சூடாகச் சாப்பிட்டால்தான் சுவை. இரண்டு மாதம் கழித்துச் சாப்பிடுவது பிரியாணி ஆகாது. அதுபோலவே, திட்டமிட்ட நேரத்தில் படம் வெளியாகாதது மிகப்பெரிய வேதனையைத் தருகிறது என்றார்.

மேலும் தணிக்கைத் துறையின் இந்த முடிவால் படத்தின் வசூல் மற்றும் எதிர்பார்ப்பு பாதிக்கப்படும் எனத் திரைத்துறையினர் கருதுகின்றனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.