தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் இப்போது ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, ஒரு கட்சித் தலைவராகவும் வேட்பாளராகவும் இருக்கும் நடிகர் நடித்த படத்தை வெளியிட அனுமதி உண்டா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் இதுதான் முதல்முறை நடக்கும் சம்பவம். எனவே, இதுபற்றி டெல்லி தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டுவிட்டுப் பதிலளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், அரசியல் விளம்பரங்களுக்குச் சான்றளிக்கும் குழுவான எம்.சி.எம்.சி (MCMC) இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். பேட்டியின் இடையே கலகலப்பாகப் பேசிய அர்ச்சனா பட்நாயக், “நான் தமிழ் கற்றுக்கொண்டதே சினிமா பார்த்துதான், நான் பார்த்த முதல் படம் ‘சாமி'” எனச் சிரித்தபடி கூறினார். ஒருபுறம் படம் ரிலீஸாகத் தணிக்கைக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மறுபுறம் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போது தவெக தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
