தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பது குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் பரவின. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இபிஎஸ், இந்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
”விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி குறித்து எந்தவிதப் பேச்சுவார்த்தையும் என்டிஏ தலைவர்கள் நடத்தவில்லை. அது வெறும் வதந்திதான்” என அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “எங்களது கூட்டணி ஏற்கனவே முடிவாகிவிட்டது, இனி புதிய கட்சிகள் உள்ளே வர வாய்ப்பில்லை” என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக-பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய்யின் வருகை குறித்த ஊகங்களுக்கு இபிஎஸ் அளித்த இந்தப் பதில், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
