இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கான ஈடன் கார்டன் பிட்ச் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவர் சௌரவ் கங்குலி இது குறித்துப் பேசியுள்ளார்.

முதல் நாள் முதலே ஆடுகளம் தாறுமாறான பவுன்ஸ் மற்றும் சுழற்சிக்கு சாதகமாக இருந்ததால், மைக்கேல் வாகன், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் பிட்சை கடுமையாக விமர்சித்திருந்தனர். இப்போட்டியில் மூன்று இன்னிங்ஸ்களுக்குப் பின்னரே ஒரு பேட்ஸ்மேன் அரைசதம் அடித்தார் (தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா 55 ரன்கள்), இது பிட்ச்சின் கடினத்தன்மையை உணர்த்துகிறது.

இந்த நிலையில், நியூஸ்18 பங்களாவுக்குப் பேட்டியளித்த கங்குலி, “இந்திய அணியின் முகாம் விரும்பியதுதான் இந்த ஆடுகளம். பிட்சுக்கு நான்கு நாட்களுக்குத் தண்ணீர் விடப்படாமல் இருந்தால் இப்படித்தான் இருக்கும். எனவே, பிட்ச் தயாரிப்பாளர் சுஜான் முகர்ஜியைக் குற்றம் சொல்ல முடியாது” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரிலேயே பிட்சுக்குத் தண்ணீர் விடப்படவில்லை என்றும், அதனால்தான் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இவ்வளவு சாதகமாக மாறியுள்ளது என்றும் கங்குலி கூறினார். போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இந்திய நிர்வாகம் சுழல் பிட்சை கேட்கவில்லை என்று கங்குலி கூறியிருந்த நிலையில், அவரது இந்தக் கூற்று நிலைமை மாறியிருப்பதை உறுதி செய்கிறது.

நவம்பர் 10 அன்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக்குடன் ஈடன் கார்டன் பிட்சை ஆய்வு செய்த சில நாட்களுக்குப் பின், பிட்ச் குறித்த நிலைப்பாடு மாறியுள்ளது. இருப்பினும், ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் பேசிய இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், “ஆடுகளம் இவ்வளவு விரைவாக மோசமடையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.