ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்துள்ள நெகிழ்ச்சியான காரியம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் சுமார் 11 மைதான ஊழியர்களுக்கு (Ground Staff), தலா 10 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைத் தனது சொந்தப் பணத்திலிருந்து காசோலையாக வழங்கியுள்ளார் ஹர்திக். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, ஹர்திக் பாண்டியா வான்கடே மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்காக அந்த ஊழியர்கள் இரவு நேரங்களிலும் கூடுதல் நேரம் ஒதுக்கி உதவி செய்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல், தற்போது ஐபிஎல் பயிற்சிக் காலத்தின்போது அதனை நிறைவேற்றி அனைவரது மனங்களையும் வென்றுள்ளார் ஹர்திக்.

பொதுவாக ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் சர்ச்சைகளுக்காக விமர்சிக்கப்படும் ஹர்திக் பாண்டியாவின் இந்த மறுபக்கம், அவரது விமர்சகர்களையும் வாய்மூட வைத்துள்ளது. தனது வெற்றிக்காக உழைத்த அடிமட்ட ஊழியர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர் செய்துள்ள இந்த உதவி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“சொன்ன சொல்லைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ” என ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி விவகாரத்தில் ரசிகர்கள் மத்தியில் நிலவிய அதிருப்தி, ஹர்திக்கின் இந்த மனிதாபிமானச் செயலால் ஓரளவுக்குத் தணியத் தொடங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த ஊக்கம் வான்கடே மைதான ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.