இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், தனது தந்தை யோகராஜ் சிங்கின் பிறந்தநாளை மிகவும் எளிமையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், யுவராஜ் சிங் தனது தந்தை யோகராஜ் சிங்கை இறுக்கக் கட்டிப்பிடித்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மைதானத்தில் அதிரடி காட்டும் வீரராக அறியப்பட்ட யுவராஜ் சிங்கின் இந்தப் பாசமான பக்கம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கேக் வெட்டி எளிமையாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில், தந்தை – மகன் இருவருக்கும் இடையே இருந்த பிணைப்பு பார்ப்பவர்களை நெகிழச் செய்தது. இந்தக் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக, யுவராஜ் சிங்கின் குழந்தைகளுடன் யோகராஜ் சிங் ‘வீடியோ கால்’ மூலம் உரையாடினார். அப்போது தனது பேரக் குழந்தைகளுடன் பேசிக்கொண்டே, தனக்குத்தானே பிறந்தநாள் பாடலைப் பாடி மகிழ்ந்தார் யோகராஜ் சிங். “ஹேப்பி பர்த்டே டூ மீ…” (Happy Birthday to me…) என அவர் உற்சாகமாகப் பாடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. மேலும்  “கிரிக்கெட் மைதானத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அழகான குடும்பத் தருணம் இது” என ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தந்தை – மகன் இடையிலான இந்த வலுவான பிணைப்பை பலரும் பாராட்டி, யோகராஜ் சிங்கிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.