பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடருக்கான கேப்டன்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் தேசிய அணி குறித்த கேள்விக்கு வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி கடும் கோபத்துடன் பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தான் தேசிய அணி சமீபகாலமாக சந்தித்து வரும் தொடர் தோல்விகள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் எரிச்சலடைந்த லாகூர் கலாண்டர்ஸ் அணியின் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி, அந்தப் பதிலை பாதியிலேயே தடுத்து நிறுத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,”பாகிஸ்தான் அணியைப் பற்றி இப்போது எதுவும் கேட்காதீர்கள். நாங்கள் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். எனவே, பி.எஸ்.எல் தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள். எப்போது நாங்கள் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடுகிறோமோ, அப்போது தேசிய அணி குறித்த கேள்விகளைக் கேளுங்கள், நாங்கள் பதில் சொல்கிறோம்,” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

அதே செய்தியாளர், பாகிஸ்தான் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட பாபர் அசாமிடம் அவரது அடுத்தக்கட்ட திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பினார். ஆனால், பாபர் அசாம் அந்தத் தர்மசங்கடமான கேள்விக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்தார்.

தேசிய அணியில் விமர்சனங்களைச் சந்தித்தாலும், பி.எஸ்.எல் தொடரில் ஷாஹீன் அப்ரிடி ஒரு வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார். இவரது தலைமையில் லாகூர் கலாண்டர்ஸ் அணி 2022, 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. பி.எஸ்.எல் வரலாற்றில் மூன்று முறை கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக 2026 பி.எஸ்.எல் தொடரின் அனைத்துப் போட்டிகளும் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. மார்ச் 26 முதல் மே 3 வரை நடைபெறும் இந்தப் போட்டிகள் அனைத்தும் மூடிய மைதானங்களுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.