பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 கிரிக்கெட் தொடரில், வீரர்களின் சீருடையிலிருந்து சாயம் ஒட்டியதால் வெள்ளை நிறப் பந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உலக அளவில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘லாகூர் கலாண்டர்ஸ்’ மற்றும் ‘ஹைதராபாத் கிங்ஸ்மென்’ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியினர் களத்தடுப்பில் (Fielding) ஈடுபட்டிருந்தபோது, பந்தை பளபளப்பாக்க (Shine) தங்களது சீருடையில் தேய்த்துள்ளனர்.
அப்போது, அந்த அணியின் ஜெர்சியில் இருந்த இளஞ்சிவப்பு நிறச் சாயம் பந்தில் ஒட்டிக்கொண்டது. ஆட்டம் தொடரத் தொடர, வீரர்கள் பந்தைத் தொட்டு வீசியதில், பந்து முழுவதுமே இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறியது.
Peak Pakistan Super League standards 😭
During the very first match of PSL 11, the ball literally turned pink every time Hyderabad Kingsmen players rubbed it on their kit.
Did they get knockoff kits instead of authentic ones?
International league or gully-level experiment? 🤡 pic.twitter.com/Beq5zhmSkb
— Brutal Truth (@sarkarstix) March 26, 2026
வெள்ளை நிறப் பந்து திடீரென நிறம் மாறியதைப் பார்த்த ரசிகர்கள், அந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரியாமல் ‘பிங்க் பால்’ கிரிக்கெட்டை அறிமுகம் செய்துவிட்டது” என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். “சர்வதேச தரத்திலான ஒரு தொடரில், வீரர்களின் சீருடை இவ்வளவு தரம் குறைந்ததாக இருப்பதா?” எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுவாக இரவு நேரப் போட்டிகளில் பந்து வெள்ளையாக இருந்தால்தான் பேட்ஸ்மேன்களுக்குத் தெளிவாகத் தெரியும். பந்தின் நிறம் மாறினால் அது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடும். இவ்வளவு பெரிய குளறுபடி நடந்தும், பி.எஸ்.எல் நிர்வாகம் இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. ஏற்கனவே அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் விமர்சனங்களைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு, இந்த ‘சாயம் போன’ விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
