மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், தனது 28 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர நீதிமன்றத்தை நாடிய நிலையில், அங்கு அவர் செய்த காரியம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1998-ல் திருமணமான இந்த தம்பதிக்கு இடையே 2015 முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். விவாகரத்து பெறத் துடித்த அந்தப் பெண், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்டதாகக் கூறி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதற்கு ஆதாரமாக ஒரு குடும்பப் புகைப்படத்தையும் தாக்கல் செய்தார். அதில் தனது கணவருக்கு அருகில் நின்ற பெண்ணை “இரண்டாவது மனைவி” என அவர் அடையாளம் காட்டினார். இதை நம்பிய நீதிமன்றம், கணவர் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே ஒருதலைப்பட்சமாக விவாகரத்து வழங்கியது.
ஆனால், சமீபத்தில் இந்த தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருந்தது தனது தங்கை என்றும், திட்டமிட்டு பொய்யான ஆதாரத்தை அளித்து தனது மனைவி நீதிமன்றத்தையே ஏமாற்றிவிட்டதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த வினோத வழக்கைக் கேட்ட நீதிபதிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
