மும்பை அந்தேரி பகுதியில் உள்ள சாக்கடையை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியாமல் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் சகார் காவல் நிலையத்தில் 80 வயது மதிக்கத்தக்க பிளாங்கா செக்வேரா என்ற மூதாட்டி காணாமல் போனதாகப் புகார் பதிவாகியிருந்தது தெரியவந்தது. அந்த மூதாட்டியின் பழைய புகைப்படங்களைச் சடலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவர் கையில் அணிந்திருந்த அதே வளையல்கள் சடலத்திலும் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

உடற்கூறாய்வில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவரது தம்பி ஜோசப் தாமஸ் மற்றும் அவரது மனைவி மரியா ஆகியோரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அந்த தம்பதி, கடைசியில் குடும்பத் தகராறில் தங்களது அக்காவை அடித்துக் கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க சாக்கடையில் வீசியதை ஒப்புக்கொண்டனர். தற்போது அந்த கணவன்-மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.