“நெடுங்காலமாக ஒன்றாக வாழ்ந்து, ஒரு குழந்தையும் பிறந்த பிறகு, துணைவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கேள்வியை முன்வைத்துள்ளது. நீண்ட கால லிவ்-இன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் உறவு முறிந்த பிறகு அளிக்கப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், பரஸ்பர சம்மதத்துடன் தொடர்ந்த ஒரு உறவை, பிரிவிற்குப் பிறகு திடீரென குற்றமாக மாற்ற முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, திருமண வாக்குறுதியை மீறுவது என்பது எல்லா நேரங்களிலும் பாலியல் வன்கொடுமை (Rape) ஆகாது என்ற கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
நீண்ட கால உறவில் இருக்கும்போது இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதலும் சம்மதமுமே முக்கியமானது; அதனைப் பிரிவிற்குப் பிறகு ஒரு குற்றச்சாட்டுக்கான கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். சட்டத்தின் நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த உறவில் ஒரு குழந்தை பிறந்த பிறகும், இத்தகைய புகார்கள் எழுவது சட்டத்தின் நோக்கத்தையே திசைதிருப்புவதாக அமையும் என உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தனது அதிரடி பார்வையை முன்வைத்துள்ளது.
