குஜராத் மாநிலம் சூரத்தில் கணவனே தனது மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை மறைக்க கையாண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விஷால் சால்வி என்பவர், தனது மனைவி ஷில்பாவை அடித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை ஒரு மரப்பெட்டியில் திணித்து அதன் மேல் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் பூசி மறைத்துள்ளார்.
தனது 13 மற்றும் 8 வயது குழந்தைகளுடன் அதே வீட்டிலேயே, மனைவியின் சடலத்துடன் 5 நாட்கள் சகஜமாக வாழ்ந்துள்ளார் அந்த நபர். மனைவி காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய விஷால், தனது மாமனாருடனேயே சேர்ந்து போலீஸ் நிலையத்திற்குச் சென்று தேடுவது போலவும் நடித்துள்ளார்.
ஆனால் 5 நாட்களுக்குப் பிறகு, தனது மகனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு விஷால் தலைமறைவானார். அந்தக் கடிதத்தில், “நான்தான் கொலை செய்தேன், சடலம் இங்கேதான் இருக்கிறது” என அவர் எழுதியிருந்ததைக் கண்டு குடும்பத்தினர் உறைந்து போயினர்.
தகவலறிந்து வந்த போலீசார், சிமெண்ட் பூச்சை உடைத்து அழுகிய நிலையில் இருந்த ஷில்பாவின் உடலை மீட்டனர். வேலையில்லாததால் ஏற்பட்ட குடும்பத் தகராறே இந்த கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கணவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
