இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹைதராபாத்தில், அதிகாலையில் நடைப்பயிற்சி சென்ற இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம், பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது.

ஹைதராபாத்தின் முக்கியப் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதையில் (Cycling Track), இன்று காலை 6:00 மணியளவில் அந்த இளம் பெண் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் முன்னிலையில் அநாகரிகமான முறையில் (சுய இன்பம் செய்தல்) ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது அலைபேசியில் வீடியோ எடுக்க முயன்றபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

“எனது அலைபேசி கேமரா இன்னும் இரண்டு மில்லி செகண்ட் முன்னதாகத் திறந்திருந்தால், அந்த நபரின் முகத்தை உலகுக்குக் காட்டியிருப்பேன். என்னால் இப்போது அவனது முகத்தை அடையாளம் காட்ட முடியவில்லையே,” எனக் கண்ணீருடனும் ஆத்திரத்துடனும் தனது குமுறலைப் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் அந்தப் பெண் தான் அணிந்திருந்த ஆடை குறித்து விளக்கம் அளிப்பதுதான் சமூக ஆர்வலர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் பேசிய சமூக வலைதளப் பயனர் ஒருவர், ஒரு குற்றம் நடக்கும்போது பாதிக்கப்பட்ட பெண் தான் அணிந்திருந்த ஆடைக்காகத் தன்னைத் தானே நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பது நாட்டின் அவலநிலையைத் தான் காட்டுகிறது. ஆடையைவிட, தவறு செய்பவர்களின் மனநிலைதான் மாற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, ஹைதராபாத் இனி பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பள்ளிகளில் பாலியல் கல்வி மற்றும் பாலின சமத்துவம் குறித்துக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பொது இட அநாகரிகங்களுக்கு உடனடி மற்றும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மக்கள் நடமாட்டம் உள்ள பூங்காக்கள் மற்றும் நடைப்பயிற்சிப் பாதைகளில் அதிகாலை நேரங்களில் கூடுதல் போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

“ஹைதராபாத்தில் இனி பாதுகாப்பாக உணர முடியவில்லை” என்று பல பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தனிமையான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சிலர் அறிவுறுத்தினாலும், “சுதந்திரமாக நடமாடும் உரிமையைத் தற்காப்பு என்கிற பெயரில் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?” என்று மாற்றுக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடலாம் என்ற எண்ணமே இதுபோன்ற சம்பவங்கள் தொடரக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தப்பியோடிய அந்த நபரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.