உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது 17 வயது மருமகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரும், மற்றொரு சம்பவத்தில் 6 வயது சிறுமியைக் கொன்று ஆற்றில் வீசிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் காணாமல் போனதாக அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீஸார் செல்போன் அழைப்புகளை (CDR) ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் முடிவில், அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மாமாவே (அத்தையின் கணவர்) அவரைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. போலீஸார் சிறுமியை மீட்டபோது, அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது.
அபர்ணா யாதவ் உத்தரவு: மாநில மகளிர் ஆணைய துணைத் தலைவர் அபர்ணா யாதவ் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, பாதிக்கப்பட்ட சிறுமி அவரிடம் அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அபர்ணா யாதவ், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சிறுமிக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோன்று மற்றொரு கொடூரச் சம்பவத்தில், 6 வயது சிறுமியை அவரது சித்தப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, 52 வயதான தனது மைத்துனர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, கழுத்தை நெரித்துக் கொன்று உடலை ஆற்றில் வீசியதாகத் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் “இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது; அவர்களுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
