இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் பிரபலமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தனது காந்தக் கண்களால் உலகம் முழுவதும் அறியப்பட்ட ராஜஸ்தான் பெண் ‘பப்பு தேவி’ குறித்த தகவல்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் மேளாவின் வீதிகளில் சிறுமியாக இருந்த பப்பு தேவியைப் வெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர் ஒருவர் தற்செயலாகப் படம் பிடித்தார். அவரது கண்கள் ‘பெண் சிங்கத்தின் கண்களைப் போல’ கூர்மையாகவும், மஞ்சள் கலந்த பச்சை நிற ஒளியுடனும் இருந்தன.

அந்த ஒரு புகைப்படம் ராஜஸ்தான் சுற்றுலாவின் அடையாளமாக மாறியது. வெளிநாட்டவர் வாங்கும் போஸ்ட்கார்டுகள் (Postcards) முதல் சுற்றுலா கடைகள் வரை அந்தப் பெண்ணின் கண்கள் பதிக்கப்பட்ட புகைப்படங்கள் உலகமெங்கும் பரவின.

தற்போது 30 வயதைக் கடந்துள்ள பப்பு தேவி, இன்றும் புஷ்கரின் அதே தெருக்களில் தான் வசித்து வருகிறார். அங்கு ஒரு சிறிய கடை நடத்தி வரும் அவர், கைவினைப் பைகள் மற்றும் நினைவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், தனது சிறுவயது புகைப்படம் அச்சிடப்பட்ட போஸ்ட்கார்டுகளையே அவர் இன்றும் தனது கடையில் விற்பனை செய்து வருகிறார்.

இவருக்கு ஒரு சபாரி டிரைவருடன் திருமணமாகி, மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்குத் தனது தாயைப் போலவே அதே அபூர்வமான கண்கள் அப்படியே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல சுற்றுலாப் பயணிகள் பப்பு தேவியையும் அவரது மகள்களையும் பார்த்துவிட்டு, “நீங்கள் லென்ஸ் அணிந்துள்ளீர்களா?” என்று வியப்புடன் கேட்கின்றனர். இது குறித்துப் பேசிய பப்பு தேவி, “இது எங்களது இயற்கையான கண் நிறம். பலர் எங்களை ‘பஞ்சாரா’ (நாடோடி) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்தச் சமூகம் அல்ல; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்காகவே அந்தப் பாரம்பரிய உடைகளை அணிகிறோம்,” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் எவ்வித நவீன விளம்பரங்களும் இன்றி, தனது கண்களாலேயே உலகத்தையே தன் பக்கம் ஈர்த்த பப்பு தேவியின் கதை, இணையத்தில் மீண்டும் ஒருமுறை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.