பீகார் மாநிலம் பாட்னா சிட்டி, சௌக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்த் காலனி பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவைச் சேர்ந்த ரயீஸ் (70) என்பவர், சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள ஒரு சந்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென ரயீஸின் கழுத்தில் பலமாக வெட்டினார்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவரை, அந்த நபர் ஆத்திரம் தீர மீண்டும் மீண்டும் கழுத்தில் வெட்டினார். மக்கள் கூட்டத்திற்கு மத்தியிலேயே இந்த கொடூரச் செயல் அரங்கேறியது. முதியவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொடூரக் கொலை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முதியவர் தாக்கப்படுவதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், அதிர்ச்சியில் உறைந்து போயினர். எனினும், கொலையாளியைத் தடுக்கவோ அல்லது பிடிக்கவோ யாரும் முன்வரவில்லை. கொலையைச் செய்த நபர், எவ்வித பதற்றமும் இன்றி அங்கிருந்து நிதானமாக நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் பலியான ரயீஸின் மகள் ஷப்னம் காட்டூன் கூறுகையில், “முகமது அயாஸ் என்பவர் தான் எனது தந்தையைக் கொலை செய்துள்ளார். அவர் ஏற்கனவே எனது தந்தைக்குக் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். வீட்டில் இருந்து தந்தை வெளியே வந்ததில் இருந்தே அவர் பின்தொடர்ந்து வந்து இக்கொலையைச் செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளபோலீசார், தடய அறிவியல் நிபுணர்களுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.