தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்வது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, அதிரடி வீரர் சஞ்சு சாம்சனை ‘டாப் ஆர்டர்’ வரிசையில் களமிறக்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 இடதுகை ஆட்டக்காரர்களுடன் களமிறங்கியது. இது எதிரணிக்குச் சாதகமாக அமைந்ததோடு, இந்தியாவின் பேட்டிங் சமநிலையையும் பாதித்தது. இது குறித்து அகமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உதவிப் பயிற்சியாளர் ரயான் டென் டோஸ்கேட் கூறியதாவது:
“அணியின் டாப் ஆர்டர் வரிசையில் சஞ்சு சாம்சனைச் சேர்ப்பது குறித்து நாங்கள் ஏற்கனவே சிந்தித்து வருகிறோம். அணியில் அனுபவமிக்க வீரர்கள் மற்றும் நிலையான பேட்டிங் வரிசை இருப்பது அவசியம். சஞ்சு சாம்சன் ஒரு மிகச்சிறந்த வீரர். அவரை முன்வரிசையில் களமிறக்குவது அணிக்கு மிகப்பெரிய பலத்தைத் தரும்.”
மநடப்புத் தொடரில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், அதில் 8 பந்துகளில் 22 ரன்கள் குவித்து தனது அதிரடியை நிரூபித்தார். எனினும், அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது டாப் ஆர்டர் வீரர்கள் (அபிஷேக் சர்மா, திலக் வர்மா) சொதப்பி வருவதால், சாம்சனை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பயிற்சியாளர் டென் டோஸ்கேட் மேலும் பேசுகையில், “திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மற்ற பேட்ஸ்மேன்களுடன் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறிவிட்டனர். ஒவ்வொரு இன்னிங்ஸின் தொடக்கத்திலும் விக்கெட்டுகளைப் பறிகொடுப்பது மற்ற வீரர்கள் மீது அழுத்தத்தை உண்டாக்குகிறது. அடுத்த சில நாட்களில் சஞ்சு சாம்சனின் சேர்க்கை குறித்து ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
