இந்திய இளையோர் (U-19) கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், பீகாரின் வளர்ந்து வரும் விளையாட்டு அடையாளமுமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை அம்மாநில அரசு முறைப்படி கௌரவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்ரேயாசி சிங் ஆகியோர் வைபவ்வை நேரில் சந்தித்துப் பாராட்டினர். கடந்த ஓராண்டில் தேசிய அளவில் பீகார் மாநிலத்திற்கு பெருமை சேர்த்த வைபவ்வின் சாதனையைப் பாராட்டி, அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
இடதுகை தொடக்க ஆட்டக்காரரான வைபவ், சமீபத்தில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பையில் (U-19) இந்தியாவின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தார். இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 15 பவுண்டரிகள், 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்து இந்தியா 6-வது முறையாக உலகக் கோப்பையை வெல்ல உதவினார். இத்தொடரின் 7 போட்டிகளில் 439 ரன்கள் (சராசரி 62.71, ஸ்ட்ரைக் ரேட் 169.50) குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இளையோர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக 25 இன்னிங்ஸ்களில் 1,412 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையையும் வைபவ் தன்வசம் வைத்துள்ளார். சர்வதேசப் போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் வைபவ் முத்திரை பதித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் மிக இளவயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
வைபவ்வின் இந்த அபார வளர்ச்சி குறித்துப் பேசிய அதிகாரிகள், “வைபவ் வெறும் திறமைசாலி மட்டுமல்ல, இக்கட்டான சூழலில் போட்டியை மாற்றக்கூடிய ஒரு மேட்ச் வின்னர்” எனப் புகழ்ந்தனர். மேலும் வரும் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கியத் தூணாக அவர் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
