தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி மேற்கொண்ட தவறான உத்திகளே தோல்விக்குக் காரணம் என முன்னாள்  சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாடியுள்ளார். ஐபிஎல் பாணியிலான ‘மேட்ச்-அப்’ (Match-up) தந்திரங்களை ஐசிசி தொடர்களில் பயன்படுத்துவது ஆபத்தானது என அவர் எச்சரித்துள்ளார். இந்தத் தோல்வி குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்ததாவது:

“ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் இருப்பதால் ஒருசில மாற்றங்களைச் செய்யலாம். ஆனால், உலகக் கோப்பை போன்ற தொடர்களில் அணியை நிலையாக வைத்திருப்பதே வெற்றியைத் தரும். அக்ஷர் படேல் இந்திய டி20 அணியின் மிக முக்கியமான வீரர் 2024 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவர் ஆடிய இன்னிங்ஸை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு வீரரை நீக்கியது மிகப்பெரிய தவறு.

மேலும், “இடதுகை பேட்டர்களுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்துவது சரியான உத்திதான் என்றாலும், அக்ஷரை வெளியே உட்கார வைத்துவிட்டு அதைச் செய்திருக்கக் கூடாது” என அவர் குறிப்பிட்டார். பேட்டிங் வரிசையில் இந்தியா செய்த மாற்றங்களையும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். “ரிங்கு சிங் போன்ற ஒரு தரமான பேட்டரை 8-வது வரிசையில் களமிறக்குவது முறையல்ல. அதேபோல் வாஷிங்டன் சுந்தரை 5-வது வரிசையில் இறக்கியதும் பலனளிக்கவில்லை.

வாஷிங்டன் சுந்தரின் திறமை மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், ‘முழுமையான தயாரிப்பு இல்லாமல் களத்திற்கு வராதீர்கள்’ என்று தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது” என அஸ்வின் காட்டமாகத் தெரிவித்தார்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் கௌதம் கம்பீர் வகுத்த வியூகங்கள் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய அஸ்வின், “பரிசோதனைகளை விட அனுபவத்திற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். மேலும் அகமதாபாத்தில் 111 ரன்களுக்கு இந்தியா சுருண்டது அணியின் பேட்டிங் ஆழத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.