டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த படுதோல்விக்குப் பிறகு, இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர்கள் ரயான் டென் டோஸ்கேட் மற்றும் சிதான்ஷு கோடக் ஆகியோர் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
தொடர்ந்து சொதப்பி வரும் மூன்று பேட்டர்களில் குறைந்தது ஒருவராவது அடுத்த போட்டியில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அணியின் டாப்-ஆர்டரில் அதிகப்படியான இடதுகை ஆட்டக்காரர்கள் இருப்பதையும், அதுவே எதிரணிக்குச் சாதகமாக அமைவதையும் அணி நிர்வாகம் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
அணியிலிருந்து நீக்கப்படப்போகும் அந்த ஒரு வீரர் யார் என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இந்நிலையில் அபிஷேக் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்கித் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். திலக் வர்மா முக்கியமான மிடில் ஆர்டரில் ரன் குவிக்கத் தடுமாறி வருபவர். ரின்கு சிங்தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டக்-அவுட் ஆகினார்.
இந்த மூவரில் ஒருவருக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த அல்லது வலதுகை ஆட்டக்காரர் ஒருவரைச் சேர்ப்பதன் மூலம் பேட்டிங் வரிசையில் சமநிலையை ஏற்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்தப் போட்டிக்கான இந்திய அணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள பயிற்சிக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
