சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 24 வயது பயிற்சி டாக்டர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி முடித்து, நெல்லை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில், இவரது மொபைல் செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டு, ஓரினச்சேர்க்கை தொடர்பான அழைப்பை வழங்கியுள்ளார். இதனை நம்பிய பயிற்சி டாக்டர், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நள்ளிரவில் தனது இருசக்கர வாகனத்தில், நெல்லை-தூத்துக்குடி சாலையில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு ஒருவர் அவருடன் உரையாடியபின், அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றார். அப்போது, அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல், கையில் கட்டையுடன் வந்துச் சரமாரியாக தாக்கி, பணம் மற்றும் தொலைபேசியை பறித்தது. மேலும், அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.21 ஆயிரத்தை ‘ஜி-பே’ மூலம் தங்களது கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பயிற்சி டாக்டர், எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல் தனியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவான இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி டாக்டர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்,  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.