மெரினா கடற்கரையில் சீருடை அணியாமல் வந்திருந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாரொருவர், தனது தோழியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் பொது ஆடைதான் அணிந்திருந்தார்.  அவரை பெண் போலீசாரென்று அறியாமல் வந்த இரண்டு வடமாநில  வாலிபர்கள், ஆபாசமாக பேசி, அவருக்கு தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

உடனே, அந்த பெண் போலீசார் துணிவுடன் செயல்பட்டு, அவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தார். மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார். பிடிபட்ட வாலிபர் சுக்லா (வயது 33) என அறியப்பட்டுள்ளார். இவர், பிற மாநிலத்தைச் சேர்ந்தவராகவும், கொடுங்கையூரில் தங்கி வேலை பார்த்து வந்தவராகவும் தெரியவந்தது.

பின்னர், சுக்லாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண் போலீசார், அவர்மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் போலீசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் செயலுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.