சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விருந்து நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், கீழ்ப்பாக்கம் போலீசாரும் இணைந்து அதிரடியாக ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர்.

அந்த நேரத்தில், ஓட்டலின் ஒரு பெரிய அறையில் ஏராளமானோர் கஞ்சா போதையில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வழங்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த விருந்தில் பங்கேற்ற 3 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த ஓட்டலின் மேலாளராக இருந்த சுகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெங்களூருவை சேர்ந்த 23 வயதான பிரவல்லிகா என்ற பெண், ஒரு பிரபல இசையமைப்பாளரின் மகள் என்பது தெரியவந்துள்ளது. இவர் தற்போது சென்னை சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வருகிறார். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.