காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்த சரவணனின் மகன் வெங்கடேசன் (வயது 16). இவர் குன்றத்தூர் அருகிலுள்ள கொல்லச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டுத் தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் வெங்கடேசன் பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பள்ளி விடுமுறை நாட்களில் வெங்கடேசன் நீண்ட நேரம் செல்போனில் ஈடுபட்டிருந்ததாகவும், பள்ளிக்கு செல்லும் நாளில் தலைவலி குறித்து கூறியிருந்ததாகவும் தெரிந்துள்ளது.
வெங்கடேசனின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெளிவு பெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி வளாகத்திலேயே மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
