‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ போன்ற திரைப்படங்களுக்கு எதிராகத் திமுக அரசு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், திட்டமிட்டு யாருக்கும் தொல்லை தரும் அரசு இதுவல்ல என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தாமதமாவது குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், “ஜனநாயகன் அல்லது பராசக்தி என எந்தத் திரைப்படத்திற்கும் எதிராகச் செயல்பட வேண்டிய தேவை திமுக அரசுக்கு இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமென்றே தொல்லை தரும் அரசு இதுவல்ல என்பது உலகுக்கே தெரியும். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை” என்றார்.

தைப்பொங்கலுக்குப் பொதுமக்களுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் கோரிக்கை குறித்துப் பேசிய அவர், “கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தபோது ரூ. 5,000 வழங்க வேண்டும் என நாங்கள் கேட்டோம். அப்போது அவர்கள் கொடுத்தார்களா? பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்” எனப் பதிலடி கொடுத்தார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு மது விற்பனையே காரணம் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது: “அவர் எதையாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார். அவரது கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அவருக்கு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது; அது சீர்குலையவில்லை” என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.