நடிகர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மர்மமான முறையில் தாமதம் ஏற்படுவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரத் தயாராக உள்ளது. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

தணிக்கைக் குழுவினர் கடந்த டிசம்பர் 19-ம் தேதி படத்தைப் பார்த்துவிட்டு, சில காட்சிகளை நீக்க அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. அதன்படி படக்குழுவும் அக்காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் சமர்ப்பித்தது. இருப்பினும், படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது படக்குழுவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ஜனநாயகன் படத்தை தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து ‘UA’ சான்றிதழைப் பரிந்துரை செய்துவிட்டனர். ஆனால், தற்போது வரை அதிகாரப்பூர்வமாகச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதைத் தடுப்பது யார்?

வெற்றியைத் தட்டிப் பறிக்க ஒரு கூட்டம் வரலாம், பல தடைகளும் வரலாம். ஆனால், அனைத்துத் தடைகளையும் தகர்த்து ‘ஜனநாயகன்’ வெற்றி வாகை சூடுவது உறுதி,” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் முழுநேர அரசியலில் இறங்கிய பிறகு வெளியாகும் படம் என்பதால், இதில் அரசியல் வசனங்கள் மற்றும் சமூகக் கருத்துகள் அதிகம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால் தணிக்கைத் துறையின் இந்தத் தாமதம் திட்டமிட்ட ஒன்றாக இருக்குமோ என்ற விவாதம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.