ஐதராபாதில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், உயிரிழந்த பெண்ணின் உடலை நான்கு நாட்களாகத் தகனம் செய்யாமல் வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏசுரத்னம் என்பவரின் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர்.

இவரது மகள் ஷைலஜா (46) உடல்நலக் குறைவால் பிப்ரவரி 13 அன்று உயிரிழந்தார். அவரது உடலை உடனடியாக அடக்கம் செய்யாமல், ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குடும்பத்தினர் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நாட்கள் செல்லச் செல்ல அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விசாரித்தபோது, இது தங்களது தனிப்பட்ட விஷயம் என்றும், பிரார்த்தனை முடிந்து தாங்கள் விரும்பும்போது இறுதிச்சடங்கு செய்வோம் என்றும் அக்குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில், மாநகராட்சி மூலம் உடலை அப்புறப்படுத்த நேரிடும் என்று போலீசார் எச்சரித்த பிறகு, அவர்கள் உடலைத் தங்கள் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்ய ஒப்புக்கொண்டனர்.

அக்குடும்பத்தினர் யாரிடமும் அதிகம் பழகமாட்டார்கள் என்றும், கடந்த சில நாட்களாக அவர்களின் நடத்தை விசித்திரமாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.