உத்தரப்பிரதேச மாநிலம் பிளிபிட் மாவட்டத்தில், மரணத்தின் விளிம்பிற்குச் சென்று ஒரு பெண் மீண்டும் உயிர் பிழைத்து வந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் வினிதா சுக்லா என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவர் ‘மூளைச் சாவு’ (Brain Dead) அடைந்துவிட்டதாகக் கூறி கைவிரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கண்ணீருடன் வினிதாவின் உடலை இறுதிச்சடங்கு செய்வதற்காக ஆம்புலன்ஸில் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஹாபிஸ்கஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் எதிர்பாராத விதமாக ஏறி இறங்கியுள்ளது. அந்த பலமான அதிர்ச்சியில் (Jerk), வினிதாவின் உடலில் திடீரென அசைவு ஏற்பட்டு அவர் சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். இதைக் கண்டு மிரண்டு போன குடும்பத்தினர், உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின், வினிதாவுக்கு பாம்பு கடித்ததாலேயே உடல் செயலிழந்தது கண்டறியப்பட்டது. சுமார் 13 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஒரு விபரீதமான சாலையோரப் பள்ளம், ஒரு உயிரைக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
