உத்தரப்பிரதேச மாநிலம், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட மோதல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விநியோக மையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் விடிய விடியக் காத்திருந்த நிலையில், சிலிண்டர்களைப் பெறுவதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி, ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்குப் பயங்கர அடிதடியாக மாறியது. தங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைக்காக மக்கள் இப்படி நடுரோட்டில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் காட்சிகள் காண்போரை வேதனை அடையச் செய்துள்ளது.

​இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அம்மாநில அரசின் நிர்வாகத் திறமை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலிண்டருக்காக மக்கள் இப்படித் தெருவில் இறங்கிச் சண்டையிடும் அவலநிலை, அங்கு நிலவும் கடுமையான தட்டுப்பாட்டையே காட்டுகிறது எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “அடிப்படை வசதிகளைச் செய்து தருவதை விட, மற்ற ஆடம்பர விஷயங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதன் விளைவுதான் இது” என நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.