தமிழக அரசியல் களம் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு புதிய யுத்தத்தையே சந்தித்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற பாப் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் “தே டோன்ட் கேர் அபௌட் அஸ்” (They Don’t Care About Us) என்ற பாடலின் பின்னணி இசையை வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒரு அதிரடி வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு குளறுபடிகள் மற்றும் தவறுகளைச் சுட்டிக்காட்டி வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் பிரபலமான ஒரு பாடலை அரசியல் விமர்சனத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், தவெக தொண்டர்கள் இதனை உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய நிர்வாகச் செயல்பாடுகளைச் சாடும் வகையில் அந்த வீடியோவின் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கு திமுக ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்வினைகள் வந்தாலும், மைக்கேல் ஜாக்சன் பாணியில் தவெக-வினர் செய்துள்ள இந்த ‘மியூசிகல் அட்டாக்’ இளைஞர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. அரசியல் ரீதியான மோதல்கள் இப்போது இசை மற்றும் கலை வடிவமாக மாறி சோஷியல் மீடியாவை அதிர வைத்துள்ளது.