கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், 2022-ஆம் ஆண்டில் சாலை ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தற்போதைய தமிழக அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாஜவிலிருந்து விலகி அண்மையில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரிக்கும் தற்போதைய தமிழக அரசின் முயற்சியை நான் வரவேற்கிறேன். இந்த வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவாக விசாரித்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டைனை பெற்றுத்தர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
அதே நேரத்தில், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் வெளிச்சத்திற்கு வந்த பல்வேறு முக்கிய ஊழல் புகார்கள் குறித்தும் தமிழக அரசு உடனடியாக விசாரணைக் குழு அமைத்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதில் முதற்கட்டமாக சில முக்கிய ஊழல் பட்டியல்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.
பி.ஜி.ஆர். எனர்ஜி முறைகேடு: விதிமுறைகளைப் புறந்தள்ளி, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கி, பின்னர் அது ஊடகங்களில் அம்பலமானதால் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
சத்துணவுப் பெட்டக (நியூட்ரிஷன் கிட்) முறைகேடு: அரசு நிறுவனமான ‘ஆவின்’ இந்த ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பை வழங்க முன்வந்த நிலையிலும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு சத்துணவுப் பெட்டகங்களைக் கொள்முதல் செய்தது.
பொங்கல் வேட்டி முறைகேடு: காட்டன் நூலுக்குப் பதிலாக அதிகளவில் பாலியஸ்டர் நூல் கலந்து வேட்டி நெய்தது. இதுகுறித்த ஆதாரங்கள் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துத் துறை முறைகேடுகள்: மாநில போக்குவரத்துத் துறையில் வாகனங்களுக்கான ‘ரிப்ளெக்டிவ்’ மற்றும் ‘ரியர் மார்க்கிங் பிளேட்டுகள்’ கொள்முதல் செய்ததில் நடைபெற்ற தொடர் முறைகேடுகள்.
தமிழ்நாடு மருத்துவப் பொருட்கள் கழக (TNMSC) முறைகேடு: பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல் செய்ததில் நிகழ்ந்த முறைகேடுகள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA): 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள்.
நோபல் ஸ்டீல்ஸ் விவகாரம் குறித்து கேள்வி, இவற்றுடன், தமிழக மக்கள் நீண்ட நாட்களாக விடை தெரியாமல் தவிக்கும் ஒரு மர்மத்திற்கும் இந்த அரசு தீர்வு காண வேண்டும். முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நற்பணி மன்றமும், ‘நோபல் ஸ்டீல்ஸ்’ (Noble Steels) நிறுவனமும் பல ஆண்டுகளாக ஒரே முகவரியில் இயங்கி வருவது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை முறையான பதில் இல்லை.
மேலும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்று வந்த உடனேயே, இந்த நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ₹1,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது. (அந்த முதலீடு வெறும் அறிவிப்போடு மட்டுமே நின்று போனது தனிக்கதை). இந்த விவகாரத்தில் உள்ள சந்தேகங்களையும், மர்மங்களையும் தற்போதைய அரசு தீர்க்க முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
