செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரம் வனப்பகுதியில் கிடந்த வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில், தனியார் கல்லூரி பொறியியல் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஹீமான்யூ யாதவ் என்ற அந்த மாணவர், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்தார்.

தனது நண்பர்கள் ஐந்து பேருடன் அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றபோது, அங்கு சிதறிக் கிடந்த ஒரு மர்மப் பொருளை ஒரு மாணவர் எட்டி உதைத்ததாகத் தெரிகிறது. அப்போது அந்த ராக்கெட் லாஞ்சர் பாறையில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், ஹீமான்யூ யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் இருந்த விஷால், ஆர்யன் சர்மா உள்ளிட்ட நான்கு நண்பர்கள் பலத்த காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமந்தபுரம் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வது வழக்கம் என்பதால், அங்கு வெடிக்காமல் கிடந்த வெடிபொருள் ஏதேனும் இந்த விபத்துக்கு காரணமா என்ற கோணத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் காயமடைந்த மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அனுமதியின்றி வனப்பகுதிக்குள் மாணவர்கள் சென்றது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.