வருகிற மார்ச் 28-ம் தேதி தொடங்கவுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவிற்கான அட்டவணை வெளியான நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிராக சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’, ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய திரைப்படங்களின் பாடல்களை, உரிய அனுமதியின்றி சி.எஸ்.கே. அணி தனது விளம்பரங்களில் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, அதனைத் தடுக்கக் கோரி சன் டிவி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும், இது தொடர்பாக இடைக்காலத் தடையும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. சன் டிவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன் வாதிடுகையில், “சன் டிவி நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பிறகு, சி.எஸ்.கே. நிர்வாகம் ரஜினிகாந்த் படப் பாடல்களைத் தனது விளம்பரங்களிலிருந்து நீக்கிவிட்டது. எனினும், எதிர்காலத்திலும் இந்த பதிப்புரிமை மீறல் நடைபெறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சி.எஸ்.கே. தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “தொடர்புடைய விளம்பரங்களிலிருந்து அந்தப் பாடல்கள் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டன. முறையான அனுமதி அல்லது உரிமம் பெறாமல் இனி எந்தப் பாடல்களையும் பயன்படுத்தமாட்டோம்” என்று உறுதி அளித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இது தொடர்பாக சி.எஸ்.கே. நிர்வாகம் உரிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை மார்ச் 16-ஆம் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதி ஒத்திவைத்தார்.
மேலும் மார்ச் 28-ம் தேதி பெங்களூருவில் தொடங்கும் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் போட்டியில் மார்ச் 30-ம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
