டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இல்லை என்பதால், கில் வேண்டுமென்றே அவரை நீக்கிவிட்டுப் புகைப்படத்தைப் பதிவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சுப்மன் கில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் மற்றொரு புகைப்படத்துடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் சஞ்சு சாம்சன் இருந்த புகைப்படமும், கில் பகிர்ந்துள்ள புகைப்படமும் வேறாக இருந்ததால், “கில் எடிட் செய்து சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டார்” என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவியது. ‘Beast’ என்ற எக்ஸ் ) கணக்கு உள்ளிட்ட பலரும் இது குறித்துக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஆனால், இந்தச் சர்ச்சை முற்றிலும் ஆதாரமற்றது என்பது தற்போது தெரியவந்துள்ளது. புகைப்படத்தை உற்று நோக்கினால், வீரர்களின் நிற்கும் விதம் மற்றும் கோப்பையின் நிலை இரண்டு புகைப்படங்களிலும் சற்று மாறுபட்டுள்ளது. சுப்மன் கில் பதிவிட்டது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் அல்ல; வெற்றிக் கொண்டாட்டத்தின் வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு புகைப்படங்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. வீரர்கள் மேடையில் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வெவ்வேறு கோணங்களே இந்த குழப்பத்திற்குக் காரணம்.

இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருக்க, அடுத்ததாக நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் சீசனுக்காக இரு வீரர்களும் தயாராகி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு சஞ்சு சாம்சன் மாறியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிக்காக சுப்மன் கில் களமிறங்க உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் அவதூறு பரப்புவது, வீரர்களுக்கு இடையிலான நல்லுறவைச் சிதைக்கும் முயற்சி என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். எந்தவொரு ஆதாரமும் இன்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.