2026 டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து, 255 ரன்கள் குவித்து இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது! 3 முறை உலகக்கோப்பை வென்ற முதல் அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்ற அணி என ஹாட்ரிக் சாதனைகளைத் தட்டித் தூக்கியது இந்தியா. அபிஷேக், பும்ரா, ஹர்திக் என ஒவ்வொருவரும் மிரட்டினார்கள். குறிப்பாக சூப்பர் 8-ல் இருந்து கம்பேக் கொடுத்து, மூன்று அரைசதங்களுடன் ‘தொடர் நாயகன்’ விருது வென்ற சஞ்சு சாம்சன் இந்திய வெற்றியில் தூணாக நின்றார். ஆனால், இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில், ஒரு போட்டோ சர்ச்சை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது.

​இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில், இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துப் பகிர்ந்த ஒரு போட்டோவில், சஞ்சு சாம்சனின் முகம் மட்டும் மாயமாகியுள்ளது! “என்னது.. சஞ்சுவை டீம்ல இருந்து தூக்குன காண்டுல, போட்டோவுலயும் தூக்கிட்டாரா கில்லு?” எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். கில்லுக்குப் பதில் சஞ்சு சேர்க்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியில் தான் அவர் இப்படிச் செய்தாரா என்ற கேள்வி ஒருபுறம் எரிய, “இல்லை.. போட்டோ எடுத்த ஆங்கிள் அப்படி” என அவரது ஆதரவாளர்கள் முட்டுக்கொடுக்கின்றனர். ஒரு இந்திய கேப்டனே இப்படிச் செய்யலாமா என விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், கில் வாய் திறந்தால் மட்டுமே இந்த ‘போட்டோ பாலிடிக்ஸ்’ மர்மம் விலகும்!