தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை, ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ள விவகாரத்தில், பிசிசிஐ எந்தவித முடிவும் எடுக்க முடியாது என்று அந்த அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களை ஒப்பந்தம் செய்வது, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் வீரரை சன்ரைசர்ஸ் நிர்வாகம் ஒப்பந்தம் செய்ததற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் சுக்லா, “இது ஐபிஎல் தொடர் சம்பந்தப்பட்டது அல்ல. ஐபிஎல் அணிகள் ஒரு வெளிநாட்டு லீக் தொடருக்காக அந்த வீரரை ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் பிசிசிஐ-க்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது எங்கள் அதிகார வரம்பிற்குள் வராத விவகாரம் என்பதால், எங்களால் இதில் தலையிட முடியாது. இது தொடர்பாக அந்தந்த அணிகளே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.

ஐபிஎல் அணிகள், உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணியில் இணைப்பதற்கு இந்தியத் தரப்பில் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும் முன்னதாக, வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் பிசிசிஐ கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. ஆனால், ‘தி ஹண்ட்ரட்’ தொடரை பிசிசிஐ நிர்வாகம் நடத்தாததால், இந்த விவகாரத்தில் அந்த அமைப்பு எந்தவொரு கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாத சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.