வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா துரதிர்ஷ்டவசமாகவும், நகைச்சுவையாகவும் ரன்-அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வங்கதேச வீரர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முகமது ரிஸ்வானும், சல்மான் அலி ஆகாவும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்போது, மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய பந்தை ரிஸ்வான் நேராகத் தட்டிவிட்டார். பந்து ஆகாவின் கால்களுக்கு அருகே சென்றது.

தனது கிரீஸை விட்டு முன்னேறியிருந்த ஆகா, பந்து தன் அருகில் இருந்ததால், அதை எடுத்து பந்துவீச்சாளர் மிராஸிடமே கொடுத்துவிட முயன்றார். ஆகாவின் இந்த  செயலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மிராஸ், பந்தை வாங்கி மின்னல் வேகத்தில் ஸ்டம்புகளை நோக்கி வீசினார். கிரீஸிற்குள் நுழையத் தவறிய ஆகா, ரன்-அவுட் ஆகி வெளியேறினார். 64 ரன்களில் அவர் ஆட்டமிழந்தது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. தனது சிறிய தவறால் விக்கெட்டைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் இருந்த ஆகா, மைதானத்தை விட்டு வெளியேறும்போது வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிலைகுலைந்த பாகிஸ்தான் அணி, 47.3 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முன்னதாக சதாக்கத் அதிரடியாக 75 ரன்களைக் குவித்தார். வங்கதேசத் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான், இந்த இரண்டாவது போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. ஆனால், ஆகாவின் இந்தத் தேவையற்ற ரன்-அவுட் விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.