தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான த.வெ.க, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், ‘அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுகளுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்று பொதுமக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்’ என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்குமார் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த உத்தரவை அப்படியே செயல்படுத்திக் காட்டும் வகையில், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா நெகிழ்ச்சியான காரியம் ஒன்றைச் செய்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை, அவர்  தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த எளிமையான நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.